16 ஆவது நிதி ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு வகுப்பெடுத்துள்ளது. ஆணைக்குழு அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அளித்துள்ள அறிக்கையில் ‘‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற அடிப்படையிலானது!
மாநிலங்களுக்கிடையே நிதி வருவாயை முறையாக பங்கிட்டுக் கொடுக்கவும், அதன்மூலம் மாநிலங்களின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும், அரசமைப்புச் சட்டப்படி நிதி ஆணையம் அமைக்கப்பட்டு, அதில் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்று, மாநிலங்களுக்கும் சென்று, மாநில அரசின், மக்களின், குறிப்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டும், மாநிலங்களுக்கு நிதியைப் பிரித்து ஆண்டுதோறும் அளித்து வருவர்.
அந்த வகையில் நேற்று (18.11.2024) 16 ஆவது நிதி ஆணையத் தலைவரையும், உறுப்பினராகிய பெருமக்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக வரவேற்று, அக்குழுவினரிடம் தங்களுடைய கருத்துரைகளை விளக்கமாகவும், விவேகத்துடனும் எடுத்துரைத்துள்ளார்.
1.நிதிப்பகிர்வு கடந்த 15 ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி 41 விழுக்காடாக உயர்த்தியதை நாங்கள் (தமிழ்நாடு ‘திராவிட மாடல்‘ அரசு) உளமாரப் பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பரிந்துரைக்கு மாறாக, கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்கிறது.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை ஒன்றிய அரசு இக்காலகட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
2.ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகை தொடர்ந்து உயர்ந்துவருவதும், தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது.
ஒருபுறம் ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால், மாநில அரசுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. மறுபுறம், ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என்ற இரண்டுமே மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படவேண்டும்!
எனவே, ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், ஏற்புடைத்ததாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு 50 விழுக்காடு பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி, நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும்.
எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்குரிய அரசமைப்புச் சட்ட திருத்தங்கள் வாயிலாக ஒரு உச்சவரம்பை இந்த நிதிக் குழு பரிந்துரைத்து, மாநில அரசுகளுக்கான 50 விழுக்காட்டினை உறுதி செய்திடும் என்று நான் நம்புகிறேன்.
3.மாநிலங்களுக்கிடையேயான வரிப் பகிர்வினை முறைப்படுத்துவதில் சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9 ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த 7.931 சதவிகிதத்திலிருந்து கடந்த 15 ஆவது நிதிக் குழுப் பரிந்துரைப்படி, 4.079 தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வந்துள்ளது!
நாட்டிற்கே வழிகாட்டும் பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தைத் தொடர்ந்து நல்கிவரும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தொய்வடையச் செய்து தண்டிப்பதைப்போல, தற்போதைய வரிப் பகிர்வு முறை அமைந்துள்ளதை நான் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன். (இதுபற்றி மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்குகையில், 3.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாகத் தெளிவாக விளக்கியுள்ளார்).
இதற்கு மேலும் 16 ஆவது நிதி ஆணையத்திடம், நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மிகவும் துல்லியமாக, அய்ந்து ஆபத்துகளையும் சிறப்பாக பட்டியலிட்டு விளக்கியுள்ளார்.
1.முதியவர்கள் அதிகமாக வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவரும் அபாயம்!
2.நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவு நிதி, மானியங்களை வழங்கவேண்டும்!
3.செயற்கையாக உருவாக்கப்படும் நிதிப் பகிர்வு முறை எதிர்பார்த்த பலன்களைத் தராது!
4.தமிழ்நாடு சந்தித்துவரும் சவால்கள்!
5.கடந்த காலங்களில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வு காண்க!
என்று மிகவும் ரத்தினச் சுருக்கமாக மாநிலங்களின் பொருளாதார நிலையைப் பொதுவாகவும், தமிழ்நாட்டு நிதிநிலைபற்றிக் குறிப்பாகவும் குறிப்பிட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது!
‘‘உறவுக்குக் கைகொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுப்பது’’ என்ற தத்துவத்தின் தனிப்பெரும் இலக்கியமாக இந்த அறிக்கை உள்ளது!
இந்தக் கோரிக்கை அறிக்கை விளக்கத்தைப்பற்றி, 16 ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் பிரபல நிதித்துறை வல்லுநர் அரவிந்த் பனகாரியா அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிடுகையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கை விளக்க மனுபற்றியும், முதலமைச்சரின் விளக்கம்பற்றியும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். திராவிட மாடல்‘ ஆட்சிக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சருக்கும், நிதித் துறைக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆக்கப்பூர்வப் பாராட்டாக கருத வேண்டும்.
மேலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தெளிவான சிந்தனை, செயலாக்கத்திறன்!
ஒன்றிய நிதி ஆணையத்திடம் அளிக்கப்பட்ட அறிக்கை, மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு தயாரித்து தந்துள்ள முறையான ஒன்று.
1. ‘‘Painstakingly and very Systematic’’
2. ஒரு ஆணையத்திற்குச் சிறந்த தெளிவான வகுப்பு எடுத்துச் சொன்னதுபோன்ற அறிக்கை. (‘‘A Master Class for any Commission’’)
3. மிகவும் ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒன்று. ‘‘By for the most well – researched, the most comprehensive, very analytical’’
விரிவான, காரண காரியங்களுடன் கூடிய, கருத்துக் கோவையாகத் தரப்பட்ட அறிக்கை என்று கூறியுள்ளது. ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தெளிவான சிந்தனை, செயலாக்கத்திறன் – நியாயத்தின்மேல் நின்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டப்படிக்கானதாக உள்ளது என்பதையே மனந்திறந்து ஆணையம் பாராட்டியுள்ளது.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சீனாவின் கணினி Lenovo விற்பனை சரிவு: இந்தியர்கள் புறக்கணிப்பது ஏன்?