எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மன்னார் கடல் பகுதியில் வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரண்டு விசைப்படகுடன் கைது. இலங்கை கடற்படை நடவடிக்கை.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு மீன்வலத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது மீனவர்கள் மன்னார் கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து ஐ என் டி என் 10 எம் எம் 206 எண் கொண்ட தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த அந்தோணி அருண் என்பவரது சொந்தமான விசைப்படகில் சென்ற எட்டு மீனவர்களையும் இதே போல ஐ என் டி என் 10 எம் எம் 543 என்ற எண் கொண்ட ராமேஸ்வரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பூண்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ஒன்பது மீனவர்கள் என மொத்தம் 17 மீனவர்களை இலங்கை கடற்படை மன்னார் கடற்பகுதியில் வைத்து கைது செய்துள்ளது . இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.