தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், 17,633 பேர் எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் வருகிற ஏப்ரல் 08ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 9.20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 4.57 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களும், 4.52 லட்சத்திற்கு அதிகமான மாணவிகளும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 48,700 தேர்வு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3,350 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 17,633 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 17,633 பேர் தேர்வு எழுதவில்லை. அதிகளவிலான மாணவர்கள் தேர்வு எழுதாததால் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.