ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு சஞ்சய் , மதியழகி ஆகிய மகன் மகள் உள்ளனர். இந்த நிலையில் தாமோதரன் மற்றும் மனைவி பாரதிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாரதி மகன் சஞ்சய் , மகள் மதியழகி ஆகிய மூவரும் கூல்ரிங்ஸில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக பாரதி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும்,தொடர்ந்து சஞ்சய், மதியழகி சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய், மதியழகி ஆகிய இருவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.