திருவண்ணாமலையில் மலை மீது இருந்து பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக அண்ணாமலையார் மலை மீது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மலை மீது இருந்த ராட்சத பாறை ஒன்று உருண்டு அடிவாரத்தில் உள்ள 2 வீடுகளுக்கு மேல் விழுந்துள்ளது. இதில் அந்த 2 வீடுகளும் மண்ணிற்குள் புதைந்தன.
இந்த விபத்தில் வீடுகளுக்குள் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 7 பேர் மண் சரிவில் சிக்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நடைபெற்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.