2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு
மே 7, 8, 9 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான கழக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அரசு ஊழியர் – ஆசிரியர் ஆசிரியர் – மாணவர் மகளிர் – கழனியில் பாடுபடும் உழவர் – ஆலையில் உழைக்கும் தொழிலாளி – மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7, 8, 9 ஆகிய நாட்களில் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்” நடைபெறும்.
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.