இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த ஜூலை முதல் வாரம் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 2 விசைப்படகுகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, 21 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களது படகுகளை திரும்ப பெற நடவடிகை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், தமிழ்நாடு மீனவர்கள் 21 பேரையும் விடுதலை செய்ததால், அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி கொழும்பிலிருந்து, விமானம் முலம் செனனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு, 21 பேரும் சென்னை திரும்பிய நிலையில் விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.