வங்கியிடம் பெற்ற ரூபாய் 52 லட்சம் கடனையும் வட்டியையும் செலுத்திய பின்னர் வாடிக்கையாளருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கியுள்ள வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள அணிமூர் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கே. தமிழரசன் (34). இவர் கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் ரிக் யூனிட் லாரியையும் அதன் சப்போர்ட் லாரியையும் வாங்குவதற்கு திருச்செங்கோட்டில் உள்ள இண்டஸ்இண்ட் வங்கியில் ரூபாய் 52 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கிய போது, வாங்கப்பட்ட வாகனங்களின் பதிவு சான்றிதழ்களில் அடமான விபரத்தை பதிவு செய்து கொடுத்ததோடு, இவரது தாயார் பெருமாயி பெயரில் உள்ள நிலத்தின் அசல் ஆவணத்தையும் வங்கிக்கு அடமானமாக கொடுத்துள்ளார்.
2022 டிசம்பர் மாதத்தில் பெற்ற கடன் தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக வங்கியில் செலுத்தியதால் தமிழரசனின் கடன் கணக்கு முடிக்கப்பட்டு விட்டது. பிறகு, வங்கியில் சமர்ப்பித்த தாயாரின் பெயரில் உள்ள நிலத்தின் அசல் ஆவணம், கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் போக்குவரத்து துறையில் பதிவு சான்றிதழ்களில் இருந்த அடமான பதிவை நீக்குவதற்கான தடையின்மை சான்று ஆகியவற்றை தமிழரசன் வங்கியில் பலமுறை கேட்டுள்ளார். அவற்றை வழங்குமாறு வழக்கறிஞர் வங்கிக்கு அனுப்பிய அறிவிப்புக்கும் வங்கி எவ்வித பதிலையும் தரவில்லை.
தமக்குத் தெரியாமல் மோசடியாக வாகனங்களுக்கு பெயர் மாற்றம் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆட்சேபணையை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க சென்றபோது தமிழரசனின் இரண்டு வாகனங்களும் கார்த்தி என்பவரின் பெயருக்கு மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஜூன் மாதத்தில் வங்கியின் மீது வழக்கு தாக்கல் செய்தார்.
திருச்செங்கோடு அருகே உள்ள குட்டி மேய்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் வடிவேல் மகன் கார்த்தி என்பவர் தமிழரசன் வங்கியில் பெற்ற கடனுக்கு ஜாமீன் கையொப்பம் செய்திருந்தார். தமிழரசனின் கடன் கணக்கு முடிக்கப்பட்ட பிறகு தமிழரசனுக்கும் கார்த்திக்கும் ஏற்பட்டிருந்த சம்மத பத்திரம் ஒன்றை கார்த்திக் தங்கள் வங்கியில் சமர்ப்பித்தார். அதில் தமிழரசன் வங்கியில் பெற்ற கடனை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் முழு கடனையும் செலுத்தவும் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் கார்த்திக்குக்கு தமிழரசன் சம்மதம் வழங்கியிருந்தார். இதனால் அவரிடம் தாங்கள் அசல் ஆவணங்களை வழங்கினோம் என்று வங்கியின் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில் (25-11-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என் லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினார். ஜாமீன் கையொப்பம் செய்த கார்த்தி வங்கியில் சமர்ப்பித்த பதிவு செய்யப்படாத சம்மத பத்திரத்தின் உண்மை தன்மையை அறியாமல் . கடன் பெற்ற தமிழரசனை நேரில் வரவழைத்து விசாரிக்காமல் அசல் ஆவணங்களை ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் வழங்கியது, சேவை குறைபாடு என்று இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தமிழரசனின் வாகனங்களின் பதிவு புத்தகங்களில் அடமான பதிவை நீக்க வங்கி வழங்கிய தடையின்மை சான்று இல்லாமல் பெயர் மாற்றம் செய்ய முடியாது. வங்கியின் தரப்பில் கார்த்தியிடம் தடையின்மை சான்றை வழங்கியதால் அவர் அதனை பயன்படுத்தி வாகனங்களை அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார். இதற்கு காரண கர்த்தாவாக அமைந்த வங்கியின் செயல் முறையற்ற சேவை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல் செய்தவரின் தாயார் பெருமாயி பெயரில் உள்ள சொத்தின் அசல் ஆவணத்தையும் சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட வாகனங்களின் உரிமை இழப்புக்கு நிவாரணமாக ரூபாய் 25 லட்சமும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சமும் தமிழரசனுக்கு வங்கி நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை..!!