ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்திவந்த ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு காஞ்சா கடத்திவரப்படுவதாக நகர காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சந்தேகப் படும்படியாக நின்ற ஒரு பெண் உள்பட இருவரை, போலீசார் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் ராஜ்(30) மற்றும் கல்பாக்கம் புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் சந்தியா என்கிற மகேஸ்வரி (30) என்பது தெரியவந்தது.
அவர்கள் ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து 30 ஆயிரம் ருபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்திவந்து, திருக்கழுக்குன்றம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய வாயலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீனா(24) மற்றும் ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் விஷ்வா(24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரிடம் இருந்து 2.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 4 பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.