கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,165 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் வெண்டிலேட்டர் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
அதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கையிருப்பு உள்ள மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 165 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் 47 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 118 நபர்கள் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் சிறப்பு மருத்துவ குழுவினர் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து இடைவிடாது சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும் உயிரிழந்தவர்களில் இதுவரை 29 நபர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதன் முதற்கட்டமாக நேற்றைய தினம் 29 நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளவர்கள் ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கருணாபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் வடிவு ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில் அவரது மூன்று குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை நிரந்தரமாக ஒலிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.