கொடுத்த வாக்குறுதிகளில் 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- மு.க.ஸ்டாலின்
சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.எல்.ஏ தங்கபாடியன் இல்ல திருமண விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி திமுக. நாடாளுமன்றத் தேர்தல் முன்பே வந்தாலும் 40-க்கு 40-ல் திமுக வெற்றி பெறும்.
கொடுத்த வாக்குறுதிகளில் 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு சதவீத வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்ற்ப்படும். நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைக்க உள்ளேன். மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா,முன்கூட்டியே நடக்குமா என்ற பேச்சு எழுகிறது. எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் அதில் 40-க்கு 40 என வெல்லப்போவது திமுகதான். அண்மையில் முடிந்த இடைத்தேர்தலை இந்தியா கூட்டணிக் கட்சிகள்தான் வென்றுள்ளன. இடைத்தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர் என்பது தெரிகிறது. இந்தியாவை காப்பாற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர் வெற்றிகளை திமுக பெற்றுவருகிறது. உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம்” என்றார்.