நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து கன்னிகா தேவி காலனி செல்லும் சாலையில் ஒய்யாரமாக தாய் கரடி குட்டியை சுமந்து நடந்துச் சென்றதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நேரம் சாலையில் குட்டியுடன் சுற்றி திரிந்த கரடி அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றது.
மேலும் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்குவதற்க்கு முன் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.