குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பகல் நேரத்திலேயே உலா வந்த கரடியால் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் கரடி ஒன்று உலா வந்தது.
மலை ரயில் வரும் நேரத்தில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கரடி உலா வந்ததால் ரயில்வே ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் அருகில் குடியிருப்பு பகுதிகளும் உள்ள நிலையில் கரடியை கண்ட குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர். பகல் நேரங்களிலேயே சர்வ சாதாரணமாக உலா வரும் கரடிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதற்குள் வனத்துறையினர் கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி: கோத்தகிரியில் இருந்து சேலாடா செல்லும் சாலையில் இரவு நேரத்தில் கரடி ஒன்று உலா வந்தது. இதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும், வாகன ஓட்டிகள் இந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரிகள் இது போன்ற சம்பவம் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.