தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
வருமானத்தை விட 354 சதவீதம் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலருமான ராமேஸ்வர முருகனின் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியச் செயலராகப் பொறுப்பு வகிப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவரது சொந்த ஊர் ஈரோடுமாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும். அங்கு அவரது பெற்றோர் சின்னசாமி-மங்கையர்க்கரசி வசித்து வருகின்றனர்.
சென்னையில் வசிக்கும் ராமேஸ்வர முருகன், அவ்வப்போது வெள்ளாங்கோவில் சென்று, பெற்றோரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார், வெள்ளாங்கோவில் சென்று, ராமேஸ்வர முருகன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மாலை வரை சோதனை நீடித்தது.
ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு, ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் நகைக் கடை வைத்துள்ளார். இவரது வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் இருக்கும் ராமேஸ்வரம் முருகன் வீட்டிலும் நேற்று சோதனை நடைபெற்றது.குறிப்பாக 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பள்ளி கல்வித்துறையில் ராமேஸ்வர முருகன் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேல்நிலைப்பள்ளி இயக்குனராகவும், தொடக்கக் கல்வி இயக்குனராகவும், மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுவின் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக தன் பெயரிலும் தன் மனைவி பெற்றோர் மாமனார் மாமியார் உள்ளிட்டோர் மீது சொத்துக்களை குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, தந்தை சின்ன பழனிசாமி தாய் மங்கையர்க்கரசி, மாமனார் அறிவுடைய நம்பி மாமியார் ஆனந்தி ஆகியோர் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு ராமேஸ்வர முருகன் மற்றும் அவர்களது உறவினர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை மதிப்பீட்டு பார்க்கும் பொழுது ஒரு கோடியே 98 லட்சத்து 10,105 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்துள்ளன.
மார்ச் 2016 ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஆறு கோடியே 52 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் சொத்துக்கள் இருந்துள்ளன. இதில் இந்த காலகட்டத்தில் ஒரு கோடியே ஒன்பது லட்சத்தி 74 ஆயிரம் ரூபாய் வருமானம் மட்டுமே இருந்துள்ளன. செலவுகள் 44 லட்சத்து 54 ஆயிரத்து 135 ரூபாய் இருந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு இவர் வைத்திருந்த சொத்து மதிப்பை 2016ஆம் ஆண்டு உள்ள சொத்து மதிப்பிலிருந்து கழித்து பார்க்கும் பொழுது சுமார் 4 கோடியே 54 லட்சத்து 41 ஆயிரத்து 954 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்துள்ளார்.
இவர் சேமிப்பு மூலமாக வைத்திருந்த பணம் 65 லட்சத்து 20 ஆயிரத்து 328 ரூபாய் ஆகும். இவ்வாறாக 2012 இல் இருந்து 2016 வரை இவரது வருமானம் வரவு செலவு மற்றும் சேமிப்பு உள்ளிட்டவட்டை கணக்கிட்டு பார்க்கும் பொழுது வருமானத்தை மூன்று கோடியே 89 லட்சத்து 21,621 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்தது அம்பலமானது.
இது வருமானத்தை விட 354.66% அதிகமாக சொத்துக்களை குவித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சோமங்கலம் கிராமத்தில் திருத்தங்கல் மாதவரம் நகர பகுதிகளில் வீட்டுமனைகளும், புஞ்சை நிலங்களாக நாட்டரமங்கலம் கிராமம் கீழ திருத்தங்கள் கிராமம் பழைய ஸ்ரீவாரம் நாத நல்லூர் கிராமம் அயன்சால்வார்பட்டி ஆகிய இடங்களில் உள்ளன மற்றும் வீடுகளாக திருத்தங்கல்,மாதவரம், ஜவஹர் நகர், கொல்லம்பாளையம் ஆகிய இடங்களிலும் ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் உள்ளன என்பது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் பொழுது வருமானத்திற்கு அதிகமாக இவ்வளவு சொத்துக்களை எவ்வாறு சேர்த்தார் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.குறிப்பாக இவர் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகள் இருக்கும் பொழுது லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்துக்களை குவித்துள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.அடுத்த கட்டமாக ராமேஸ்வர முருகனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.