Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையில் சென்ற ஸ்கூட்டி மீது திடீரென பாய்ந்த மாடு... கல்லூரி மாணவி படுகாயம்!

சாலையில் சென்ற ஸ்கூட்டி மீது திடீரென பாய்ந்த மாடு… கல்லூரி மாணவி படுகாயம்!

-

நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடிரென இருசக்கர வாகனத்தின் மீது பாய்ந்ததில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தார்.

நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் அடுத்த திருமால் நகரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சுவாதிகா. இவர் இன்று காலை 9 மணி அளவில் கல்லூரிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தியாகராஜ நகர் 2-வது நடுத்தெருவின் வழியாக சென்றபோது, அங்கு சாலையோரம் நின்றிருந்த மாடுகளில் ஒன்று, திடீரென மாணவி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட மாணவி சுவாதிகா பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தியாகராஜ நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் இது போன்று அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் மாடுகளை மீட்டு அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தியாகராஜர் பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ