இன்று அதிகாலை பிளக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தையடுத்த திண்டல் வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு (வயது 40). சுரேஷ் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சொந்தமாக பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் அதிக விலை உயர்ந்த பிரிண்டிங் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன.
நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் நிறுவனத்திலிருந்து புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் இச்சம்பவம் குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். சுமார் முப்பது நிமிடம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சி.என்.சி. மெஷின், அதிநவீன பிரின்டிங் மிஷின், ஏ.சி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தகுந்த நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா என தெரிய வில்லை. இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.