எடப்பாடி பழனிசாமி மீது புதிய புகார் அளிக்கலாம்! ஐகோர்ட் டிவிஸ்ட்
எடப்பாடி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பான புகார் மீது மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் புதிதாக புகார் அளிக்கலாம் என்று மனுதாரர் ஆர்.எஸ்.பாரதிக்கு தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளை அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதில் 4800 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் செய்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சிறப்பு புலனாய்வு அமைப்பு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் பாரதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சு எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் இந்த மனுவை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பியது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணையில் இருந்து வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வு அமைப்பை அமைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தன்னுடைய மனுவை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ். பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா இந்த குற்றச்சாட்டு குறித்து புதிதாக விசாரணை நடத்த விஜிலென்ஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். அதில் சிறப்பு புலனாய்வு விசாரணை கேட்ட ஆர் எஸ் பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில் எந்த தவறும் இல்லை. அதில் குறை காண எதுவும் இல்லை. ஆட்சி மாற்றம் காரணமாக ஒரே புகாரை புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளார். மனுதாரர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 156(3) வது பிரிவின்படி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் புதிய புகாரை அளிக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.