உயிருடன் இருக்கும் மனைவி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய கணவன்
கிருஷ்ணகிரி அருகே உயிருடன் இருக்கும் மனைவி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்த தாளாப்பள்ளியை சேர்ந்தவர் சேதுராம் (44). ஆடிட்டர். இவரது மனைவி சுகன்யா (34). இவரும் ஆடிட்டர் ஆவார். கணவன் & மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் சுகன்யா தனது பெற்றோர் வீடான கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதிக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சென்று விட்டார். கணவன் & மனைவி இடையே விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி கிருஷ்ணகிரி நகர் ஆர்.சி. சர்ச் அருகிலும், வேறு சில இடங்களிலும் சுகன்யா இறந்து விட்டதாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சுகன்யா கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதில் முன்விரோதம் காரணமாக, தான் இறந்ததாக கணவர் சேதுராம் பேனர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் ஆடிட்டர் சேதுராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக ஒட்டப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டது.