ஃபெஞ்சல் புயலின்போது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று, தரையிறங்காமல் உடனடியாக மேலே மிகுந்த குலுக்களுடன் பறந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று காலை மோசமான வானிலை நிலவியதால் பெரும்பாலான விமானங்கள் தரையிறங்க முடியாமல், வேறு இடங்களுக்கு திரும்பி சென்றன. சில விமானங்கள் வானிலே நீண்ட நேரம் வட்டமடித்துவிட்டு, பின்னர் தரை இறங்கின.
இந்த நிலையில் மும்பையில் இருந்து 124 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று, சென்னையில் தரையிறங்க முயன்ற நிலையில், திடீரென தரை இறங்காமல் உடனடியாக வானில் உயரே பறக்கத் தொடங்கியது. அப்போது அந்த விமானம் மிக மோசமாக குலுங்கிக் கொண்டு சாய்ந்து ஆபத்தான முறையில் வானில் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்கு பின்னர், அதே விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மும்பையில் இருந்து வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முயன்றபோது, விமானிக்கு தற்போது தரை இறங்குவது பாதுகாப்பானது இல்லை என்று தெரிய வந்ததால், அவசரமாக மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், அவ்வாறு திடீரென விமானம் வானில் பறக்க தொடங்கும்போது, சிறிது அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம் என்றும், இதில் ஆபத்தானது எதுவும் இல்லை என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மிகைப்படுத்தி தவறாக வீடியோ வெளியிடுவதாகவும், இது விமான பயணிகளை மேலும் அச்சுறுத்தும் செயல் என்றும் இண்டிகோ நிறுவனம் குற்றம்சாட்டியள்ளது.