Homeசெய்திகள்தமிழ்நாடுகலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

கலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

-

கலாஷேத்ரா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணி நுண்கலை நடனக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் வாய்மொழி ரீதியாக பாலியல் துன்புறுத்தல் தரும் பேராசிரியர் உள்ளிட்ட நால்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த கல்லூரி மாணவிகள் நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கல்லூரி வரும் ஏப்ரல் 6-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக மாணவிகளின் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், கல்லூரியில் திடீர் விசாரணை நடத்தி பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணையம் அவசர அறிக்கை அளித்தது.

காவல்துறை விசாரணையை தடுத்த மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் கல்லூரிக்கு ஆதரவான ஒருதலைபட்ச அறிக்கையால் ஏமாற்றம் அடைந்த மாணவிகள், தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தையடுத்து கல்லூரியை ஏப்ரல் 06ம் தேதி வரை மூடியுள்ளது கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரி நிர்வாகம்.

இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல, தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது காவல்துறை கூட சற்று மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்தப்படும், தவறு நடந்திருந்தால், யாராக இருந்தாலும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பாலியல் தொல்லை புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை 210 மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது என்றும் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

MUST READ