உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு உதகையில் இருந்து நாள்தோறும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக பேருந்துகள் செல்லும்போது அவ்வப்போது வனவிலங்குகள் சாலையில் குறுக்கிடுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று உதகையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மசினகுடியை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வனப்பகுதியிலிருந்த வெளியேறிய ஒற்றை காட்டு யானை, திடீரென ஆக்ரோஷமடைந்து அரசுப்பேருந்தை தாக்க ஓடிவந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட அரசுப்பேருந்து ஓட்டுநர், யானையை தடுக்கும் விதமாக பேருந்தின் ஹாரன் ஒலியை தொடர்ந்து எழுப்பி கொண்டிருந்தார். இதனால் பேருந்தின் அருகே ஓடிவந்த காட்டுயானை பின்னர் விலகிச் சென்றது. சாலையின் அருகே சிறிது நேரம் நின்றிருந்த அந்த காட்டுயானை பின்னர் வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றது.
இதனை தொர்ந்து அரசு பேருந்து மசினகுடிக்கு புறப்பட்டு சென்றது. இதனிடையே, காட்டுயானை அரசு பேருந்தை தாக்க ஆக்ரோசமாக எதிரே ஓடிவந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலகி வருகிறது. சாதுரியமாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக மசனகுடி சாலைகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.