தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பு கிராமத்தில் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள கரிசல்குடியிருப்பு கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஒற்றை யானை புகுந்தது. கிராமத்தில் உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை பயிர்களை அழித்து அட்டகாசம் செய்தது.
இந்த நிலையில், அதிகாலை வயலுக்கு வேலைக்கு சென்ற கிராம மக்கள் காட்டுயானையை விரட்டியபோது அது கிராமத்தில் குளத்திற்குள் சென்றுவிட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் காட்டு யானையை பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே காட்டுயானை தாக்கி கரிசல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம்(57) படுகாயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்