ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்பு
கன்னங்குறிச்சி அருகே ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், அப்பகுதியில் ரத்தப் பரிசோதனை லேப் வைத்துள்ளார். இவரது மனைவி வசந்தி, சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது இளைய மகன் சரண் உடையாபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவன் சரண், தினமும் காலை வேளையில் ஜிம்முக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை வழக்கம் போல உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற சரண், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், ஜிம் மாஸ்டரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அங்கு, அவர் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தேடியும் சரண் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவருடைய செல்ஃபோன் லொகேஷன் இறுதியாக கன்னங்குறிச்சி பகுதியை காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சரண் காணாமல் போனது குறித்து கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் செல்போன் லொகேஷனை பார்த்த போது, கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள புது ஏரியை காட்டியதால், அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரி கரையில் மகனின் செருப்பு, செல்போன் மற்றும் பள்ளியின் அடையாள அட்டை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து புதிய ஏரியில் மாணவன் குதித்திருக்கலாம் எனல் கருதி, போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் மாணவனின் உடலை தேடினர்.
சுமார் 7 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சரணின் சடலம் மீட்கப்பட்டது. அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சரண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் சரண் முத்தம்பட்டியில் இருந்து ஏன் கன்னங்குறிச்சிக்கு வர வேண்டும், அவரை பெற்றோர் ஏதாவது திட்டினார்களா? அவரை யாராவது தற்கொலைக்கு தூண்டினார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.