விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை கண்ணன் என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 60-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன மருந்துகளை வாகனத்தில் இருந்து தொழிலாளர்கள் இறக்கும்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆலையில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பலியானவர்களின் உடல்களை மல்லி காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, பட்டாசு ஆலை போர்மேன் பாலமுருகனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.