விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கார் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுவை தினகரன் நாளிதழின் பொதுமேலாளராக பணியாற்றி வந்தவர் ஹரி (36). இவர் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மரக்காணம் அருகேயுள்ள வல்லாத்தம்மன் கோயிலுக்கும் செட்டிநகர் பேருந்து நிறுத்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கார் சென்றபோது, புதுவையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிவந்த தனியார் நிறுவன வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் சிதலமடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், கார் மீது மோதிய வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தினகரன் நாளிதழின் பொதுமேலாளர் ஹரி மற்றும் வேனில் வந்த 13 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தினகரன் நாளிதழின் பொதுமேலாளர் ஹரி (36) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் அடைந்த 13 பேர் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.