லிதுவேனியா நாட்டு பெண்ணை, திருவள்ளுரை சேர்ந்த இளைஞர் காதலித்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் என்பவரது மகன் சூரியகுமார். இவர் இளங்கலை படிப்பு முடித்து, வடஐரோப்பிய நாடுடான லிதுவேனியாவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அப்போது விலங்குகள் ஆர்வலரான சூர்யகுமாருக்கு, பிரென்சு மொழி ஆசிரியரும், விலங்குகள் நல ஆர்வலருமான கமிலே டெக்னிக்கைடு என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டவே, இரு வீட்டார் சம்மதத்துடன் லிதுவேனியா நாட்டில் கிறிஸ்துவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து, தமிழக கலாச்சார முறைப்படி சூரியகுமாரின் சொந்த ஊரில் உள்ள வீட்டில் திருமணம் நடத்த கமிலே டெக்னிக்கைடு உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில் திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டையில் உள்ள வழிபாட்டுத் தளத்தில் தமிழ்நாடு கலாச்சார முறைப்படி சூரியகுமாருக்கும், கமிலே டெக்னிக்கைடுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்வில் லிதுவேனியாவை சார்ந்த பெண்ணின் தாய் ரணத்தா மற்றும் அவரது தோழிகள் தமிழ் முறைப்படி பட்டு சேலை அணிந்து கலந்து கொண்டனர். இந்தியாவுக்கு வர வேண்டும் என தங்களுக்கு ஆர்வமாக இருந்ததாகவும், தற்போது இந்தியாவிலேயே மருமகன் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் லிதுவேனியா நாட்டினர் தெரிவித்தனர். மேலும், தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் சிறப்பாக உள்ளதாகவும், அதை காட்டிலும் தமிழர்களின் உணவு மற்றும் கலாச்சாரம் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.