நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவுக்கு சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வழபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அடுத்த பசுமலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்தநிலையில் மாரிமுத்துவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சசிகலா தனது ட்விட்டர் பதிவில், “திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாரிமுத்து அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
சகோதரர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், “திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகரும், வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவரும், எதிர்நீச்சல் தொடர்மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து அவர்கள் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
திரு. மாரிமுத்து அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.