Homeசெய்திகள்தமிழ்நாடுநான் அரசியலுக்கு வருவது குறித்து காலம் பதில் சொல்லும்: வடிவேலு

நான் அரசியலுக்கு வருவது குறித்து காலம் பதில் சொல்லும்: வடிவேலு

-

- Advertisement -

நான் அரசியலுக்கு வருவது குறித்து காலம் பதில் சொல்லும்: வடிவேலு

தமிழ்நாட்டு முதலமைச்சரின் புகைப்பட வரலாற்றைப் பார்க்கும்போது பிரம்மிப்பாக உள்ளதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் காலையில் திறந்து வைத்தனர்.

இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். முன்னதாக புகைப்படக்கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் வடிவேலுவை அமைச்சர் மூர்த்தி வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, “தமிழகத்தின் அருமைத்தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடைய புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்தது எனக்கு பெருமை. இங்கே உள்ளது வெறும் படங்கள் இல்லை. எல்லாம் உண்மை. முதல்வரின் வாழ்க்கை வரலாறு படங்களை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக வாழ்வில் உயர்ந்ததை படங்களாக பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை, அவரின் வாழ்க்கையை வரலாறாக பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. எவ்வளவு பிரச்சனைகளைத் தாங்கி போராளியாக ஜெயித்து முதலமைச்சராக ஆகியுள்ளார். இதை பார்க்கும் போது தன்னம்பிக்கையும் உழைப்பும் தான் அவரை முதலமைச்சராக ஆக்கி உள்ளது என்பது தெரிய வருகிறது.

மிசா சிறையை பார்க்கும் போது சிறிய அறையில் வைத்து கொடுமைப்படுத்தியது தத்ரூபமாக தெரிகிறது. இந்த கண்காட்சியை அனைத்து மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் அவசியம் வந்து பார்க்க வேண்டும் இது அனைவருக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தலைவருடன் நெருக்கமாக பழகிய படங்களும் உள்ளன. மிசா காலத்தில் பட்ட கஷ்டங்களை வரலாற்றை உதயநிதி படமாக எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது ஆனால் நின்றுவிட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய எளிமை. யாராக இருந்தாலும் உடனடியாக தொடர்பு கொண்டு பேசக்கூடியவர், அவர் முதல்வராக வந்தது மிகுந்த சந்தோஷம். இந்த வரலாற்றை படமாக வேண்டுமானால் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும். அவரால் மட்டுமே இது முடியும். ஆனால் அரசியல் பணி உள்ளதால் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நாங்கள் அனைவரும் சேர்ந்து அவரிடம் வற்புறுத்தி கெஞ்சி இந்த படத்தை எடுக்க வைப்போம். நான் அரசியலுக்கு வருவது குறித்து காலம் பதில் சொல்லும்” என்றார்.

MUST READ