மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த 1ம் தேதி ( மார்ச் 1) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது 70 வருட வாழ்க்கை வரலாறை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதமாக ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்கிற பெயரில் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த வாரம், மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். கடந்த 12ம் தேதியுடன் தமிழ்நாடு முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை மதுரையில் தொடங்கப்பட்டது.
மதுரையில் இருந்து நத்தம் செல்ல கூடிய சாலையில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படக் கண்காட்சியை இன்று காலை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்களும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுரையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். முதல்வரின் 2 வயது முதல் தற்போது வரையுள்ள அனைத்து புகைப்படங்களையும் பார்த்து மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “இங்க பார்த்த படமெல்லாம் வெறும் படமல்ல.. எல்லாம் நிஜம்.. என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கு.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு எல்லாம் சேர்ந்து தான் இன்னைக்கு அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக்கியிருக்கு..” என்று கூறினார்..