தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு சமூக பெண்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்துகூட எதிர்ப்பு வலுத்து. இதனையடுத்து தெலுங்கு மக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கோரினார். அவர், தெலுங்கு மக்களை புண்படுத்துவது தமது நோக்கம் இல்லை என்றும், கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாகவும் தெரிவித்த அவர், தான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் கூறியிருந்தார்.
இருப்பினும் , தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்தவகையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் , எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டன.
இதனையடுத்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்படுகிறது. விசாரணைக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்ததாகவும், அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது