நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கோரினார். இருப்பினும் , அவர் மீது தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்தவகையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் , எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த, நிலையில் நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்ததாகவும், அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைத்து போலீஸார் அவரை தேடி வந்தனர்.
இதனிடயே தெங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வழக்கில் முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகை கஸ்தூரிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கஸ்தூரி, வெறுப்பு பேச்சை வெளிப்படுத்தியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். தான் பேசியதை நியாயப்படுத்தும் வகையில் கஸ்தூரி அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் நீதிபதி திட்டவட்டமாக கூறியிருந்தார்.
அத்துடன், அண்டை மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கும் வகையில் நடிகை கஸ்தூரி திட்டமிட்டு பேசியதாகவும், அவருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்றும் அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.