ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் புனிதநீராடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு தினத்தில் கோவை நொய்யல் ஆறு செல்லும் பேரூர் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதன்படி இன்று ஆடி 18-ஐ ஒட்டி ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே பேரூர் படித்துறையில் குவிந்தனர். தொடர்ந்து, நொய்யல் ஆற்றில் புனித புனிதநீராடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கை ஒட்டிஅதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேரூர் சிறுவாணி சாலையில் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல விவசாயம் செழிக்க வேண்டியும் நொய்யல் ஆற்றங்கரையில் விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆறு, பவானி ஆறு, ஆழியாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இரு கரைகளை தொட்டவாறு தண்ணிர் செல்வதால், பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.