மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை சொல்கிறார்- எடப்பாடி பழனிசாமி
திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 95% நிறைவேற்றிவிட்டதாக மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை சொல்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும். கட்டடத்திற்கு அஸ்திவாரம் போன்றவர்கள்தான் பூத் கமிட்டி உறுப்பினர்கள். பூத் கமிட்டி வலுவாக இருந்தால்தான் தேர்தலில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். மக்களை நேரில் சந்தித்து அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை விளக்க வேண்டும். திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 7.5% இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகியுள்ளனர். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுகவினர் வெளியிடுவார்கள். மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி.
10 சதவீத வாக்குறுதிகளைதான் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மிக்ஸி, கிரைண்டர் என மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றியது. தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதே முக்கியமான பணியாகும். தேர்தலின்போது விடியா திமுக 520 வாக்குறுதிகளை வெளியிட்டதில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சை பொய் கூறுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் சேலம் மாநகரில் ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் நிலவும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டால் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை அரங்கேறி வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36 அடி உள்ள நிலையில், இன்று 5 அடி குறைந்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேட்டூர் அணையில் எவ்வளவு நீர் உள்ளது? எப்படி பருவமழை பெய்யும் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ள முடியாத அரசு திமுக. இஸ்லாமியர்கள் நினைத்தபடியே அதிமுக நடந்து கொண்டது. கண்ணின் இமை காப்பது போன்று, சிறுபான்மை மக்களை காப்பதில் அதிமுக முதன்மையாக திகழ்கிறது. பல பேர் வாக்குகளுக்காக எதை, எதையோ பேசுவார்கள் நாங்கள் அப்படி கிடையாது” என்றார்.