Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

-

ஆவின் பால் தட்டுப்பாடு- திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tamil Nadu CM Stalin, Opposition leader EPS trade barbs over waterlogging  in Chennai | Cities News,The Indian Express

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில், தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்றால் என்ன என்ற நிலை மாறி, இன்று தமிழக மக்கள் குடிக்க பால் இல்லாமல் அல்லலுறும் அவல நிலையை இந்த நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டனர். தாய்ப் பாலுக்கு நிகராக ஆவின் பால், பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாக இருந்தது என்ற பாராட்டை தமிழக தாய்மார்களிடமிருந்து பெற்றது.

தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஆவின் பால் நிறுவனமும், பால் கூட்டுறவு சங்கங்களும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மூன்று வகையான தரமான பாலை வழங்கி வந்தது. அதே நேரத்தில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து உடனுக்குடன் அவர்கள் வழங்கிய பாலுக்கான விலையைக் கொடுத்து வந்தது. இதனால் அம்மா ஆட்சிக் காலங்களில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்குத் தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதேபோல், தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் நிறுவனத்துடன் போட்டிபோட்டு குறைந்த விலைக்கு தரமான விற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்தன.பாலை தமிழகம் முழுவதும், குறிப்பாக தலைநகர் சென்னை மாநகர மக்களில் 99 சதவீதத்தினர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். ஆனால், தற்போது 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விலை உயர்வு

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஆவின் நிறுவனத்தை முடக்கும் வேலையை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. பாலின் தரத்தைக் குறைத்தது. அதிக அளவு விற்கும் பாலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியது. இரண்டாம் ரகப் பாலின் கொழுப்புச் சத்தை 1 சதவீதம் குறைத்தது. ஆவின் பொருட்களில் தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயனடைய வழிவகை செய்தது. 50 சதவீதத்திற்கும் மேல் முகவர்களுக்கு பால் சப்ளையைக் குறைத்தது. முக்கியமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதலை குறைத்தது.. இதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய பாலை விற்கத் தொடங்கினார்கள்.

மேற்கண்ட காரணங்களால் இன்று, தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பால் சப்ளை அடியோடு சீர்குலைந்து போயுள்ளதால், மக்கள் அநியாய விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முறையாக, தமிழக மக்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பாலை சப்ளை செய்யாத அரசை கண்டிக்கிறேன். எங்கும் எதிலும் கமிஷன், கலெக்சன், கரப்சன் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சி செய்யும் திமுக ஆட்சியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுடன் ரகசியமாக கூட்டணி அமைத்து ஆவின் நிறுவனத்தை முடக்க நினைக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இந்நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆவின் நிறுவனத்தை சீரழித்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் போக்கை இந்த ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இல்லையெனில் ஆவின் பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் கண்ணீர் இந்த ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் சுட்டெரிக்கும்.

EPS - எடப்பாடி பழனிசாமி

உடனடியாக பால் கொள்முதலை அதிகரித்து, அனைத்து மாவட்ட பால் உற்பத்தி நிறுவனங்களையும் அம்மா ஆட்சியில் இருந்தது போல் மீண்டும் சிறப்பாக செயல்படத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பால் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் பிஞ்சு குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் என, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் தரமான ஆவின் பாலை தட்டுப்பாடின்றி வழங்க இயலாத இந்த ஆட்சியாளர்களை எதிர்த்து பொதுமக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை மேம்படுத்த அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ