கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் 50 கிராமங்கள் பாதிக்கப்படும்- ஜெயக்குமார்
விடியா திமுக அரசு மீனவர்களுக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கடலில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கையெழுத்திடும் இயக்கத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்த விடியா அரசு அழிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்க வேண்டும். கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை மீனவர்களும், மக்களும் விரும்பவில்லை. விடியா திமுக அரசு மீனவர்களுக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் 50 கிராமங்கள் பாதிக்கப்படும். விடியா திமுக அரசு மீனவர்களுக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தும்பை விட்டு வாலை பிடிக்கும் வகையில் விடியா திமுக அரசு செயல்படுகிறது. கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு தமிழக அரசுதான் காரணம். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.” என்றார்.