திமுகவினர் பயன்பெறவே மகளிர் உதவித் தொகை- தம்பிதுரை எம்பி
எல்லோருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தந்தது அதிமுக, ஆனால் தன் சொந்த கட்சிக்காரர்கள் பயன்பெற மகளிர் உதவித் தொகை தருகிறது திமுக என அதிமுக எம்.பி. தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, “ஆளுநருக்கு என்று சில அதிகாரம் உள்ளது. முதல்வருக்கும் சில அதிகாரம் உள்ளது. ஆனால் அதையே வைத்து அரசியல் செய்வது சரியல்ல. புதுவையில் நாராயணசாமி முதல்வராக இருந்தபோது, தினமும் ஆளுநரை பற்றி பேசுவதும், போராட்டும் நடத்துவதுமாக இருந்தார். அதனால் தான் புதுவையில் வளர்ச்சி பணிகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் நடக்க மத்திய அரசுடன் நட்புறவோடு இருப்பது அவசியம். ஆனால் நாராயணசாமி பாணியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுவது சரியல்ல. எங்கள் ஆட்சியிலும் ஆளுநருக்கும், எங்களுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்தன. ஆனால் நாங்கள் அதை அரசியலாக்கவில்லை.
மக்கள் பணிகளில் தான் கவனம் செலுத்தினோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் என்று ஸ்டாலின் விமர்சிக்கிறாரே, தற்போது அவர் கடிதம் எழுதியுள்ள குடியரசுத் தலைவர் மட்டும் நேரடியாக மக்களால் தேர்வானவரா? தவறு செய்தார் என்பதால் தான் செந்தில் பாலாஜியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவை பதவியில் இருந்தே நீக்கினார். அன்றைக்கு செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டிய ஸ்டாலின், இன்று தன் அமைச்சரவையில் அவரை வைத்துக்கொண்டு பேசுகிறார்.
அன்று செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்யச் சொல்லி ஸ்டாலின் ஆளுநரை சந்திக்கும்போது அவருக்கு அதிகாரம் இருந்தது, இன்று இல்லையா? தேர்தல் நேரத்தில் எல்லோருக்கும் உதவித்தொகை என்றார்கள். இன்று அதற்கும் ஒரு தகுதி என்று ஒன்றை அறிவித்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் எல்லோருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று சொன்னோம், எல்லோருக்குமே கொடுத்தோம். அதுதான் அண்ணா திமுக. திராவிட மாடல் என்று சொல்லி, தன் கட்சிக்காரர்களுக்கு உதவிட தான் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இது ஸ்டாலினின் இயலாமையை தான் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.