இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக – ஓபிஎஸ்
சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுமாறு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “விடுதலை என்னும் புனைப்பெயரில் ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் இதிகாச புராணமான ராமாயணத்தையும், மக்கள் வணங்கக்கூடிய ராமர், லட்சுமணர், சீதை, அனுமார் போன்ற இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
இது, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காவல்துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.