மத்திய அரசு என்றாலே ஸ்டாலினுக்கு நடுக்கம்- சி.வி.சண்முகம்
செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிவி சண்முகம், “செந்தில் பாலாஜி கைதால் தற்போது தமிழகத்தில் அனைத்து துறைகளும் செயலிழந்து போயுள்ளன. சென்னையில் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது ஸ்டாலின் திருவாரூருக்கு உல்லாச பயணம் மேற்கொள்கிறார். மத்திய அரசு என்று கூறினாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுங்கிக்கொண்டிருக்கிறார்.
10 ரூபாய் அமைச்சர் செந்தில்பாலாஜி என்றால் எல்லோருக்கும் தெரியும். சுமார் 5 ஆயிரம் பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் செந்தில்பாலாஜி. இதே செந்தில்பாலாஜியை கைது செய்யக்கோரி கரூரில் பேசியவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். 40 வயதை எட்டினாலே பலருக்கு அடைப்பு இருப்பது சகஜமானதுதான். அது எவ்வளவு சதவீதம் என்பதுதான் முக்கியம். தமிழக முடங்கி போயுள்ளது. ஸ்டாலின் பதுங்கி திருவாரூர் ஓடிக்கொண்டிருக்கிறார். மக்கள் மழை, வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது ஸ்டாலின், அவரது தந்தை பெயரில் கட்டடம் திறக்கிறார்.
ஸ்டாலின் தடுமாறி, பயந்து, செயலற்று போய் இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார் என சொன்னவர் ஸ்டாலின், ஆனால் செய்தாரா? அன்று செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும் என சொன்ன ஸ்டாலின், தற்போது பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறுகிறார். பாட்டிலுக்கு ரூ.10 என்றால் ரூ.2 செந்தில்பாலாஜிக்கு, மீதம் ரூ.8 ஸ்டாலின் குடும்பத்துக்கு சென்றுள்ளது. தனக்கு ஆபத்து என்றால் யாரை வேண்டுமானாலும் ஸ்டாலின் காவு கொடுப்பார்.” என்றார்.