எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்- விஜயபாஸ்கர்
ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் பார்த்து விட்டேன், எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் சந்திக்க தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கள்ளச்சாராயத்தால் நடைபெற்ற உயிரிழப்பை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி,விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், “தான் ஆட்சியில் இருக்கும்போதே அனைத்தையும் சந்தித்து விட்டேன். எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும் அனைத்தையும் சந்திக்க தயார், அதையெல்லாம் தாண்டி தான் தற்போது பேசி வருகிறேன். அனைத்தையும் சந்தித்த ஒரே ஆள் நான் தான், மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் அதிமுக, திமுக என எந்த அரசாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து தான் இருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு சட்ட போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று தீர்ப்பு பெற்று கொடுத்ததாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டையில் பாராட்டு விழா நடத்த உள்ளனர். தற்போது இதற்காக ஒன்பது அமைச்சர்கள் இன்று புதுக்கோட்டைக்கு வர உள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக சட்ட போராட்டத்தை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் தடை இல்லை என்று கடும் குளிரிலும் போராடி தீர்ப்பு பெற்று கொடுத்தது நான் தான்” என்றார்.
ஏற்கனவே ஜல்லிக்கட்டு நாயகன் ஓ பன்னீர்செல்வம் என்று அதிமுகவினர் தெரிவித்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து பிரிந்துள்ளதால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு என்று யாரும் நாயகர்கள் இல்லை என்று கூறினார். இந்த சூழலில் புதுக்கோட்டையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நாயகன் விஜயபாஸ்கர் என்று அதிமுக தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.