3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், “மேற்கு திசை காற்றும் தென் திசைக் காற்றும் சந்தித்ததன் காரணமாகவே சென்னையில் நள்ளிரவில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும், சென்னை புறநகர் மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கிற்கும், கீழடுக்கிற்கும் இடையே நிலைத்தன்மை குறைந்து இடி மின்னலுடன் மழை பெய்துவருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 2, 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் 1 முதல் தமிழகத்தில் 162 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்படைவிட 6% அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது” என்றார்.