சுதந்திரதின விழா தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சுதந்திர தின விழா மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூர் நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு விமானத்தில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இதனால் விமான டிக்கெட் கட்டணங்களும், பல மடங்கு உயர்ந்துள்ளன. சென்னை- தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.4,301லிருந்து, ரூ.10,796 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், சென்னை- மதுரை கட்டணம் ரூ.4,063லிருந்து, ரூ.11,716 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சென்னை- திருச்சி கட்டணம் ரூ.2,382லிருந்து ரூ.7,192 ஆகவும், சென்னை- கோவை கட்டணம் ரூ.3,369லிருந்து ரூ.5,349 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் சென்னை- சேலம் விமான கட்டணம் ரூ.2,715லிருந்து, ரூ.8,277 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதேவேளையில், டெல்லி, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் உயரவில்லை.