செல்பி எடுக்க முயன்ற இளைஞரை மிதித்து கொன்ற யானை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றி திரிந்த இரண்டு காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்குள் நுழைந்தது.
போச்சம்பள்ளி நகருக்குள் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளை இன்று காலை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது யானைகளின் அருகே செல்பி எடுக்க முயன்ற ராம்குமார் என்ற இளைஞரை யானைகள் மிதித்து கொன்றது. பின்னர் போச்சம்பள்ளியில் இருந்து அகரம் வழியாக பாலக்கோடு வனப்பகுதிக்கு யானைகள் விரட்டப்பட்டது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சப்பானிபட்டி எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து பாலக்கோடு வனப்பகுதிக்கு சென்றது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த காரை தும்பிக்கையால் தாக்கியதில் காரின் பக்கவாட்டில் பலத்த சேதம் அடைந்தது. பின்னர் வனத்துறையினர் அங்கிருந்த தென்னந்தோப்பு வழியே பாலக்கோடு வனப்பகுதிக்கு விரட்டினர்.
பாலக்கோடு காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து யானைகளின் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் காட்டுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், யானைகளை பார்த்தால் அதை விரட்டுவதோ, அதன் முன் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.