Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகக் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - அன்புமணி!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகக் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் – அன்புமணி!

-

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகக் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது சமூக வலைதள பதிவில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதையே நானும் சொல்கிறேன்…. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்? தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டின் மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இட ஒதுக்கீடே போனாலும் பரவாயில்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாடோம் என முரண்டு பிடிப்பது யார்? வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது, அந்த இட ஒதுக்கீட்டை நீக்காமல் ஓய மாட்டோம் என்று கூட்டம் நடத்தி முழக்கமிட்டது எந்த சமூகம்? அந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் ஜெய ராஜ மூர்த்தி யாருடைய மைத்துனர்?

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பிசி/எம்.பி.சி வகுப்பினருக்கான இடங்களை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கலாம், ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்குமான இடங்களை அவர்களில் யாரும் இல்லாத சூழலிலும் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று ஆணையிட்டிருப்பது எந்த அரசு? தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது யார்? 2019-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது யார்?

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 22% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது எந்த அரசு? சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பேராசிரியர் தனலட்சுமிக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டதை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது யார்? தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்கு திருப்பி விட்டது எந்தக் கட்சி அரசு?

அன்புமணி ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நச்சுசாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் பட்டியலின மக்கள். நச்சுசாராய உயிரிழப்புகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட முடியாது என்று கூறி குற்றவாளிகளை பாதுகாப்பது எந்தக் கட்சி அரசு? மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடை திமுக., மு.க.ஸ்டாலின் என்பது தான். ஆகவே, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களே… சிந்திப்பீர், செயல்படுவீர், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகக் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.! எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ