பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது என்றாலும், தமிழகத்தில் பாஜக படு தோல்வியையே சந்தித்திருக்கிறது. இதனையடுத்து தமிழ்நாடு பாஜகவில் இருந்து அடுத்தடுத்து பலர் நீக்கப்பட்டு வருகின்றனர். இப்படி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி கட்சிக்குள் பல பூசல்கள் நீடித்து வரும் நிலையில், அண்ணாமலை அரசியலில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் செல்ல இருப்பதாகவும், அங்கு சில மாதங்கள் தங்கி மேல் படிப்பு படிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான சான்றிதழ் படிப்பை அவர் படிக்க இருக்கிறார். மேற்படிப்பிற்காக லண்டன் செல்ல அனுமதி கேட்டு பாஜக மேலிடத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும், தலைமை இதுகுறித்து முடிவெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படிப்பிற்காக இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அழைக்கும். அப்படி இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார். இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் லண்டன் செல்ல இருக்கும் அவர் ஜனவரி வரை 5 மாதங்கள் அங்கேயே இருப்பார் என தெரிகிறது. வெளிநாடு பயணம் முடித்த பிறகே மீண்டும் தீவிர அரசியலில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த 6 மாத இடைவெளியில் கட்சி ரீதியான பணிகள் பாதிக்கப்படும் எனவும், ஆகையால் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை தற்காலிக தலைவராக யாரேனும் நியமிக்கப்படலாம் எனவும், அல்லது கட்சி செயல்பாடுகளில் அதிருப்தியில் இருக்கும் மேலிடம் இதனை சாக்காக வைத்து மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.