கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கள்ளச் சாராயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறும், கடந்த 2 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மாநில காவல் துறையினருக்குத் தெரிந்தே சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதால், அவர்கள் விசாரணையில் உண்மைகள் வெளி வராது என்று கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி என அவர் இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.