Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது பெருமையளிக்கிறது-அண்ணாமலை

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது பெருமையளிக்கிறது-அண்ணாமலை

-

அண்ணாமலை

பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது பெருமையளிக்கிறது, என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தலைசிறந்த வேளாண் அறிஞரும், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான, தமிழகத்தைச் சேர்ந்த அமரர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த டாக்டர் சுவாமிநாதன் அவர்கள், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் தாக்கத்தைக் கண்டு மனம் வருந்தி, நாட்டு மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். மரபியல், பயிர் வளர்ச்சி, தாவர இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சிகள் செய்து, இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர். இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்க, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் முக்கியக் காரணம் என்றால் அது மிகையாகாது. அவருக்கு நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பாரதரத்னா விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானதும், நம் அனைவருக்கும் பெருமையளிப்பதுமாகும்

MUST READ