தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானோர்களில். கள்ளக்குறிச்சியில் 28 பேரும், சேலத்தில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை எனவும், விலை மலிவான சாராயத்தை குடிக்க நினைப்பவர்களுக்காக கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் எனவும் கூறினார். மதுக்கடைகளை குறைக்க வேண்டுமென்றால், முதலில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.