அருணாசலப் பிரதேசம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் இராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.
வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
அருணாசலப் பிரதேசம் ஹெலிகாப்டர் விபத்தில் மார்ச் 16ஆம் தேதி அன்று பலியான இராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு இராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டு, உறவினர்கள் குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் இராணுவ வீரர்கள் முன்னேற்ற நலச் சங்கம் அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டது.
மறைந்த இராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவருடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மாவட்ட ஆட்சியர் ஷஜீவான ஆகியோர் மற்றும் கிராமத்தினர் ஏறாளமானோர் கூடியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் கிராமத்தில் உள்ள வ.உ.சி தெருவை சேர்ந்த தம்பதியர் ஆறுமுகம் – மல்லிகா. இவர்களின் ஒரே மகனான ஜெயந்த், கடந்த 13 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வந்துள்ளார்.
இவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்லா (எ) சாராத செல்வி என்ற பெண்ணுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது. ஜெயந்தின் மனைவி அவருடன் ராணுவ முகாமில் வசித்து வந்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கிய ஜெயந்த் பள்ளியில் தேசிய மாணவர் படை பிரிவில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கல்லூரியிலும் தேசிய மாணவர் படை பிரிவில் பங்கேற்று துப்பாக்கிச் சூடு போட்டியில் மாநில அளவில் சிறப்பு பரிசுகள் பெற்றுள்ளார்.
சிறு வயதிலேயே பெற்றோருடன் மதுரையில் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை தொடர்ந்த ஜெயந்த், ராணுவத்தில் பணிக்கு சேர்ந்ததும், பண்டிகை, திருவிழா நாட்களில் சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் மார்ச் 16ஆம் தேதி நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேஜர் ஜெயந்த்-ன் பெற்றோர் ஆறுமுகம் – மல்லிகா, மனைவி சாரதா செல்வி மற்றும் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்.
அவரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர், உறவினர்கள், 400 -க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மறைந்த இராணுவ வீரருக்கு வரிசையில் நின்று இறுதி மரியாதை செலுத்தினர்.
அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர் ஜெயமங்கலத்தில் உள்ள நடுபட்டி என்ற மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்த்-ன் உடல் தகனம் செய்யப்பட்டது.
வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.