அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி என்றும், உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் 2009 செல்லும் என்றும், பட்டியல் சாதியினர் மத்தியில் நிலவும் வேறுபட்ட அளவிலான ஒடுக்கு முறைகளை கணக்கில் எடுத்து உள்ஒதுக்கீடுகள் செய்வது அரசியலமைப்புச் சட்டம் 341 குடியரசுத் தலைவருக்கு தந்துள்ள அதிகாரங்களை மீறுவது ஆகாது என்றும், உள் ஒதுக்கீடுகளுக்கான போதிய தரவுகளோடு அது மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது செல்லத்தக்கது என்றும் உச்சநீதி மன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது என்று கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதன் மூலம் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடுகளை செய்வது குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாகும் என்கிற 2005 ஈ.வி. சின்னையா (எ) ஆந்திரப் பிரதேசம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு உள்ஒதுக்கீடு வழங்குவது பட்டியலின மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது, பாராபட்சத்தை ஏற்படுத்துவது போன்ற எதிர் தரப்பு வாதங்களை நீதிபதிகள் நிராகரித்துள்ளார்கள். ஒரு சமூகத்தில் வித்தியாசமான நிலைமைகள் உள்ள போது, வித்தியாசமான அணுகுமுறைகளை மேற்கொள்வதே சமநிலையை பாதுகாக்க முடியும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இத்தீர்ப்பின் மூலம் அருந்ததிய மக்களின் நீண்ட கால கோரிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போராட்டத்தை அரசியல் தளத்திலே முன்னெடுத்த பின் அது ஈடேறுகிற சூழல் ஏற்பட்டது என்பதும் வரலாறு என்றும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
அருந்ததியர்களுக்கான உள்இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி அப்போதைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களை தோழர் என். வரதராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தும் வலியுறுத்தியதை கே. பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். உள்இடஒதுக்கீடு குறித்து பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் துவங்கி உச்சநீதிமன்றம் வரை நடத்தியுள்ள தமிழக அரசுக்கும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அமைப்புகளுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குவதாகவும் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்