விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்ததில் சிறுவன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெரிய புளியம்பட்டி, சின்ன புளியம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்லும் போது அச்சத்திலேயே சென்று வருகின்றனர். அவ்வபோது இருசக்கர வாகனங்களிலு செல்பவர்களை தெருநாய்கள் விடாமல் துரத்தி செல்வதால் அவ்வபோது விபத்துக்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சின்ன புளியம்பட்டி முனியாண்டி தெருவில், ஒரு சிறுவனை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அந்த வழியாக சென்ற வெற்றி மாறன் என்ற சிறுவனை துரத்தி, துரத்தி கடித்துள்ளது. இதில் அந்த சிறுவனுக்கு முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.